சாயல்குடி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவாலயத்தில் 22 வருடத்திற்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேசியமும், தெய்வீகமும் எனது இருகண்கள் என வாழ்ந்து காட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். ஆன்மீகவாதி, விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பன்முக தோற்றத்தை கொண்டவர். இந்திய ராணுவத்தை நிறுவிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு தென் தமிழகத்திலிருந்து அதிகமான ஆட்களுடன் பெரும்படை அனுப்பியவர். இதனால் நேதாஜியின் உடன்பிறவா சகோதரராக திகழ்ந்தவர் தேவர்.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறைச்சாலை சென்றவர். குற்றப்பரம்பரை, கைரேகை சட்டத்தை நீக்க போராடி வெற்றி கண்டார்.
தொகுதிக்கே செல்லாமல் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சாதி, மதம் பேதமின்றி, தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கினார். 1908ல் பிறந்த இவர் 1963ம் ஆண்டு மறைந்தார். பிரம்மசாரியத்தை கடைபிடித்து கடவுள் முருகன் தீவிர பக்தராக இருந்து சஷ்டி திதியில் மறைந்ததால் இவரை தெய்வீக திருமகனார் என மக்கள் அழைக்கின்றனர். பிறந்த அக்டோபர் 30ம் தேதியே மறைந்தார் என்பது தனிச்சிறப்பு.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்திலுள்ள தேவரின் வீடு முன்பு சித்தர்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இவரின் மறைவிற்கு பிறகு தேவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக திமுக ஆட்சியின்போது கலைஞரால் 1969ம் ஆண்டு பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1978ல் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆரால் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. 1995ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கோயில் வடிவிலான நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டது. 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, திட்டப்பணிகள் நடந்தது.
தேவர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் புதுப்பித்தல், தோரண நுழைவு வாயில்கள், சாலைகள், சுகாதாரவளாகம், பால்குடம் மண்டபம், முளைப்பாரி மண்டபம், முடிகாணிக்கை செலுத்துமிடம், தேவரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியகம், நூலகம் போன்றவை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்து வந்த 72 ஏழை மக்களுக்கு வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டு, நூற்றாண்டு விழா அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30ம் தேதிகளில் ஆன்மீகம், அரசியல், குருபூஜை விழா என அரசு ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அக்.30 குருபூஜை விழாவில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர்அதிகாரிகள், அரசியல், சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து வணங்கி செல்கின்றனர். மேலும் நேர்த்திக்கடனாக காப்புகட்டி விரதம் இருந்து காவடி, அழகு குத்தி எடுத்து வருதல், பால்குடம், அக்னிச்சட்டி, ஜோதி, முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
நினைவாலயம் தேவரின் உறவினர்களான நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நினைவாலயம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி 22 வருடங்கள் ஆகிவிட்டதால், கோபுரம், கட்டிடங்களின் மேற்கூரை பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் நினைவாலயம் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டிட பூச்சு வேலைகளுடன் கூடிய புனரமைப்பு, கோபுரம், சிலைகள் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் முழுவீச்சுடன் நடந்து வருகிறது.
இதனுடன் வளாகத்திலுள்ள விநாயகர், முருகன் கோயிலிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து கோபுர கலசம் புதுப்பித்தல், யாகசாலை மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட கும்பாபிஷேக ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின் படி அக்டோபர் மாதம் குருபூஜை விழாவையொட்டி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என நினைவிட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
புகழ்சேர்க்கும் திமுக அரசு
1963 அக்.30ல் தேவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அப்போதைய திமுக தலைவர் அறிஞர் அண்ணா கலந்து கொண்டார். அதன் பிறகு 1969ல் கலைஞரின் உத்தரவின்பேரில் பசும்பொன்னில் நினைவிடம் கட்டப்பட்டது. தேவர் பெயரில் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலித நல்லூரில் கல்லூரிகள் துவங்கப்பட்டது. முக்குலத்தோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து 2007ல் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞரின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு, கோடிக்கணக்கில் திட்டப்பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. தேவர் வாழ்ந்த வீடு அரசு நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது. மேலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுதோறும் தேவர் நினைவிடம் வந்து நேரில் மரியாதை செலுத்தி வருகிறார்.