×

குண்டும், குழியுமாக உள்ள தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருவாரூர்: தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலையினை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் தஞ்சை வரையில் 4 வழிச்சாலை பணியானது ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதே சாலையினை தஞ்சையிலிருந்து திருவாரூர் வழியாக நாகை வரையில் சுமார் 80 கி.மீ தூரத்திற்கு 4 வழி சாலையாக அமைக்கும் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் 4 வழி என்று அறிவிக்கப்பட்ட போதிலும் நிதியினை காரணம் கூறி 2 வழி சாலையாக மாற்றப்பட்டது.

இதனையடுத்து இதற்கான ஒப்பந்த பணியினை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஒன்று ரூ.365 கோடிக்கு டெண்டர் எடுத்து பணியினை துவங்கியது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் ஓப்பந்த காலத்திற்குள் பணியினை துவங்காமல் தாமதமாக துவங்கியதன் காரணமாகவும், ஜிஎஸ்டியால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையாட்கள் கூலி உயர்வு போன்றவற்றின் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததால் அந்த தனியார் நிறுவனமானது சாலை பணியினை 50 சதவிகிதம் கூட முடிக்காமல் பாதியில் விட்டு சென்றது.

இதற்கிடையே இந்த சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு மூலம் 2ம் கட்டமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்த சாலை விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பணியினை காரணம் காட்டி ஏற்கனவே இருந்து வரும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையினை சீரமைக்க கோரி அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் சாலை பணிகளை விரைந்து முடித்து விபத்துகளை தடுத்திட வேண்டும் என்பதுடன் அதுவரையில் தற்போது இருந்து வரும் சாலையினை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thanjam-Nagai National Highway ,Gundi , Potholed Tanjore-Naga National Highway should be repaired: motorists demand
× RELATED சென்னையில் கிண்டி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை