×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 26 இடங்களில் தோல் தொழிற்சாலைகளில் 2வது நாளாக ஐடி ரெய்டு: வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியது

ஆம்பூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் உற்பத்தி ெதாழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பெருமளவு வரிஏய்ப்பு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பரிதா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் பதிவேடுகள், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம் பெருமுகையில் இயங்கி வரும் கே.எச். ஷூ கம்பெனியிலும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள கே.எச். குழுமத்திற்கு சொந்தமான 2 தோல் தொழிற்சாலைகள், பைபாஸ் சாலையில் உள்ள தோல் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் 10 வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் 150 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நள்ளிரவு வரை ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு விடுதிகளில் தங்கினர். தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் மீண்டும் கார்களில் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக தங்களது சோதனைகளை துவக்கியுள்ளனர். இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் மீரா சாகிப் தெருவில் உள்ள கே.எச். குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதன் அடிப்படையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 26 இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்றதாகவும், மேலும் ஓரிரு நாட்கள் சோதனை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vellore ,Tirupattur ,Ranipet , Tannery, IT raid on 2nd day, tax evasion documents
× RELATED வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்