மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையை பெற்றோரிடம் வழங்க விழுப்புரம் கோர்ட் மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளின் நகல்களை தங்களுக்கு வழங்குமாறு மாணவியின் தாய் செல்வி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு அறிக்கை உள்ளிட்டவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தாய் செல்விக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி நேற்று தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஆய்வறிக்கையை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது நீதிபதி புஷ்பராணி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வறிக்கையை வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஆய்வறிக்கை நகலை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட 2வது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை ஆகிய நகல்களை மட்டுமே மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதி வழங்கினார்.

Related Stories: