×

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இணைப்புகளில் கலவை பூசும் பணி தொடக்கம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு

கன்னியாகுமரி: சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர்  சிலை, உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க ரசாயன கலவை பூச தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதற்கான பணி கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பணியை தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நவம்பர் 1க்குள் பணியை முடித்து 2ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா  பயணிகளை  அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிலையை  சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவதற்கு வசதியாக, முதலில் 145 அடி உயரத்தில்  சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் கடல் சீற்றம், மழை, சூறைக்காற்று  காரணமாக சாரம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு தற்போதுதான்  நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் சிலையில் உள்ள இணைப்பு பகுதிகளில்  ஒட்டப்பட்டிருந்த பழைய கலவை அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தொல்லியல்  துறையின் அறிவுரைப்படி, சிலையின் இணைப்பு பகுதிகளில் கடுக்காய்ப்பொடி,  கருப்பட்டி, சுண்ணாம்பு, மணல் மற்றும் சில ரசாயனங்கள் கலந்த கலவை   பூசும் பணி தற்போது நடந்து வருகிறது.

கடந்த 2017ல் ரசாயன கலவை பூசும் பணி திட்டமிட்டதைவிட 4  மாதங்கள் தாமதமாகவே நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘ரசாயன கலவை பூச சாரம்  அமைப்பதுதான் மிகவும் கடினமான பணி. அது நிறைவடைந்துள்ளது. எனவே, திட்டமிட்டபடி ரசாயன கலவை  பூசும் பணி முடிக்கப்படும்’ என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Thiruvalluvar ,Kanyakumari , Kanyakumari, Thiruvalluvar statue, 145 feet height of Saram completed
× RELATED திருக்குறளில் வேள்வி!