×

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம்: பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி: வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம் என பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பேரறிஞர்  அண்ணா மறைவுக்கு பின் திருச்சியில் நடந்த கழக முதல் மாநாட்டில், தலைவர்  கலைஞர் ஐம்பெரும் முழுக்கங்களை முன்வைத்தார். அவை இன்றும் எனது நெஞ்சில்  ஆழமாக பதிந்துள்ளது. அண்ணா வழியிலே அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம்  அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து  வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்பதுதான்  அந்த ஐம்பெரும் தத்துவம். இதில்தான், திமுகவின் கொள்கை அனைத்தும்  அடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2018 மார்ச் 24-ம் தேதி ஈரோட்டில் நடந்த  மாநாட்டில், நான் 5 முழக்கங்களை முன்வைத்தேன். கலைஞரின் கட்டளையை காப்போம்,  தமிழரை வளர்த்து தமிழை போற்றுவோம். அதிகார வர்க்கத்தை அடித்து  நொறுக்குவோம், மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம், வளமான தமிழகத்தை  வளர்த்தெடுப்போம் என்பது இந்த ஐந்து முழக்கம். ஏற்கனவே, கலைஞர் கூறியது 5  முழக்கம், நான் கூறிய ஐந்து முழக்கம் என 10 முழக்கத்தில்தான் நம்  இயக்கத்தின் மொத்த கொள்கையும் அடங்கியுள்ளது. இது தமிழக வளர்ச்சிக்கும்,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் உகந்த கொள்கையாக உள்ளது. . நாம் அடையாத புகழும் இல்லை,  நாம் படாத அவமானமும் இல்லை. நாம் செய்யாத சாதனையும் இல்லை, அடையாத  வேதனையும் இல்லை. இவ்வளவுக்கு பிறகும் இந்த இயக்கம் 70 ஆண்டுகளை கடந்து  நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரே காரணம், நமது கொள்கைதான். அந்த  கொள்கையை காப்பாற்ற நமது உயிரையும் தர தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை என்னால் பட்டியல்போட்டு சொல்ல முடியும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இந்த அளவுக்கு புதிய திட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என என்னிடமே பலர் சொல்கிறார்கள். நாங்கள், சொல்லி செய்கிறவர்கள் அல்ல, சொல்லாமலும் செய்கிறவர்கள். ‘’செய்வதைத்தான் சொல்வோம், சொல்வதைத்தான் செய்வோம்’’ என்றார் கலைஞர். தற்போது, நாங்கள் சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என நிரூபித்து காட்டி வருகிறோம். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது மாநிலம் முழுவதும் சேர்த்து மொத்தமாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். மாவட்டம் வாரியாக தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். இதில், தற்போது 60 முதல் 70 சதவீதம் வரை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ளவற்றையும் உறுதியாக நிறைவேற்றுவோம். அண்ணா மீது சத்தியமாக கூறுகிறேன், விடுபட்டவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருவதை நீங்கள் கண்கூடாக காண்கிறீர்கள். ஆனாலும், எதிர்கட்சியினர் நம் மீது அவதூறு பரப்புகிறார்கள், பழி சுமத்துகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உண்மையில் எனக்கு நேரமும் இல்லை.

இங்கு வந்து, இணைந்துள்ள 55 ஆயிரம் பேரும் பல கட்சிகளில் இருந்து வந்துள்ளீர்கள். கிலிப்பிடித்த  நெஞ்சினாய் போ...போ...  என சொல்லிவிட்டு, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.  அதனால்தான், உங்களை ஒளி  படைத்த கண்ணினாய் வா... என அழைக்கிறேன்.  மாற்றுக்கட்சியில் இருந்து  நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றோ, மாற்றான்  தாய் மக்கள் என்றோ நான்  நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற  உணர்வுடன் உங்களை  அழைக்கிறேன். உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி, எனது  மனமகிழ்ச்சியை  பன்மடங்கு உயர்த்திவிட்டது. உங்களை எல்லாம் சிந்தாமல்,  சிதறாமல் திராவிட  முன்னேற்ற கழகம் என்ற கூட்டிற்குள் அழைத்து வந்து, இந்த  மாவட்டத்திற்கு  பெருமை சேர்த்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரை நான்  மனதார  பாராட்டுகிறேன்.

செந்தில்பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது   பாராட்டுக்குரிய செயலாகத்தான் இருக்கும். மு.கண்ணப்பனிடம் யாரும்  அவ்வளவு  எளிதில் பாராட்டு பெற முடியாது. ஆனால், அவரே அமைச்சர் செந்தில்  பாலாஜியை  பாராட்டிவிட்டார். இந்த கட்சி கம்பீரமாக கொங்கு மண்டலத்தில்  நிமர்ந்து  நிற்க அமைச்சர் செந்தில் பாலாஜியும் காரணம். இங்கு சேர்ந்துள்ள  55 ஆயிரம்  பேர் போலவே, இன்னும் பலர் இந்த இயக்கத்தில் இணைய  காத்திருக்கிறார்கள்.   இவ்வளவு பேர் இணைந்ததின் மூலம், பொள்ளாச்சி  ஆச்சிப்பட்டியானது, இன்று  ஆச்சரியப்பட்டியாக காட்சியளிக்கிறது.  நீங்கள் ஒவ்வொருவரும் எந்த இயக்கத்தில்  இருந்து வந்துள்ளீர்கள் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. உங்களது தலைவர்கள்  பற்றி விமர்சித்து, உங்களிடம் கைத்தட்டு பெற நான் விரும்பவில்லை.  தமிழ்நாடு மக்களுக்கு நன்மை செய்து, அதன்மூலம் பாராட்டு பெற  விரும்புகிறேன். எனவே, நீங்கள் வரவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்தில்  வந்துள்ளீர்கள்.

மிக விரைவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தல் பணிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். அதற்கு முன்பாக, கழகத்தின்  கொள்கை, லட்சியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுங்கள். கருப்பு-சிவப்பு மனிதனாக உங்ளை மாற்றிக்கொள்ளுங்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், கருப்பு-சிவப்பு கொடி, உதயசூரியன் சின்னம் ஆகியவற்றை நெஞ்சில் நிலைநிறுத்துங்கள். இவை, உங்கள் சிந்தையில் ஆறாக ஓட வேண்டும். இன்று, 6-வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளோம்.

இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்கவேண்டும். ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்துள்ளது என்பது, கழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வோம். மாபெரும் வெற்றிபெறுவோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், சேனாதிபதி,  தெற்கு வரதராஜன், சி.ஆர்.ராமச்சந்திரன். உடுமலை ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் மகேந்திரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

வெள்ளி செங்கோல் பரிசு
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், டாக்டர் வரதராஜன், பையா கிருஷ்ணன், சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசு வழங்கினர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 55 ஆயிரம் திமுகவில் இணைந்தனர்
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, பாஜ, மக்கள் நீதி மய்யம்,  அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியினர் 55 ஆயிரம் பேர் திமுகவில்  இணைந்தனர். இவர்களில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, தேமுதிக  முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், அதிமுக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்  அபிநயா, பாஜ மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் மைதிலி வினோ ஆகியோர்  முக்கியமானவர்கள் ஆவர்.


Tags : 2024 Parliamentary Elections ,Pollachi ,Public ,Assembly ,Chief Minister ,Mukha K. Stalin , Parliamentary Elections, Pollachi Public Meeting, Chief Minister M.K.Stal's speech
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி