ஆங்கிலத்தால் 5% மட்டுமே பயன் தாய் மொழியில் படிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: அமித்ஷா இந்தி திணிப்பு முயற்சி

போபால்: ‘ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,’ என்று அமித்ஷா பேசிய நிலையில், அவர் இந்திக்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை - 2020 என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இந்தியில் இருந்து குஜராத்திக்கு மொழி பெயர்த்து கட்டுரைகளை படித்தேன். இந்தியில் எனது புலமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தலைவர் ஒருவர் கூறினார். தாய் மொழியில் படிக்கும் 95 சதவீத குழந்தைகளின் திறன்கள் பயன்படாமல் போவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தாய் மொழி திறனை முழுமையாக பயன்படுத்தினால் நாடே பிரகாசமாக இருக்கும்.

 ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அமித்ஷா ஏற்கனவே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்திக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: