×

ஆதரவற்ற நிலையில் உள்ள 74 வயது தாயை தவிக்கவிட்டு மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகன் கைது: விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

சென்னை: ஆதரவற்ற நிலையில் உள்ள 74 வயதான தாய்க்கு எந்த உதவியும் செய்யாமல் அனாதையாக தவிக்கவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற நபரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் கேசவபெருமாள் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள் (74). இவர், கடந்த 15ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் எனது கணவர் குப்புசாமியுடன் வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இளைய மகன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார். எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3ம் தேதி இறந்துவிட்டார். தந்தை இறப்பு குறித்து தகவல் அளித்தும், தந்தையின் இறுதி சடங்கிற்கு வராமல் ராமகிருஷ்ணன் 10 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வந்தார். பிறகு வயதான எனக்கு வாழ உதவி செய்ய கேட்டபோது, எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். எனவே, வயதான எனக்கு உதவி செய்ய மறுக்கும் இளைய மகன் ராமகிருஷ்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின்படி, மயிலாப்பூர் போலீசார் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டபிரிவு 2007ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ராமகிருஷ்ணன் வெளிநாடு செல்லாமல் இருக்க விமான நிலையத்துக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 22ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ராமகிருஷ்ணன் போலீசாருக்கு தெரியாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல முயன்றார்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் ராமகிருஷ்ணன் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என தெரியவந்தது. உடனே விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : USA , The son who was trying to go to America was arrested, the airport officials handed him over to the police
× RELATED சில்லி பாயின்ட்…