பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக தொண்டர்களை இன்று விஜயகாந்த் சந்திக்கிறார்: துரை.வைகோ நேரில் வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று தொண்டர்களை சந்திக்கிறார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கினார். தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்டம்தோறும் தேர்வு செய்யப்பட்ட 70 ஆட்டோ டிரைவர்களுக்கு  தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் காப்பீடு, சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் பள்ளிக்கு மதிய உணவுக்காக ரூ.50,000, தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட வாரியாக 70 விஜயகாந்த் ரசிகர்மன்ற மூத்த நிர்வாகிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை நடந்தன.

அப்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுகையில், ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் ரத்ததானம் வழங்கினர். விஜயகாந்துக்கும் தொண்டர்களுக்கும் இடையில் இருப்பது ரத்த உறவாகும்.

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. எனவே யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். தமிழகத்தின் அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கும் தேமுதிக போராடும். விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் நாளை (இன்று) தொண்டர்களை சந்திக்கிறார்’’ என்றார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ நேற்று, தேமுதிக அலுவலகத்திற்கு வந்தார். கட்சியின் பொருளாளர் பிரேமலதாவை சந்தித்தார். அப்போது, வைகோவின் அரசியல் பயணம் குறித்த நிகழச்சியின் அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை.வைகோ, ‘‘விஜயகாந்த் நல்ல மனிதர். அவர் பூரண உடல்நலம் பெற்று விரைவில் மக்கள் பணி ஆற்ற வேண்டும். இந்த சந்திப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. வைகோவை பற்றி மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக வைகோ அரசியல் பயணம் குறித்த 75 நிமிட ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆவணப்படம் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அரசியல் கட்சியையும் தாக்குவதாக இல்லை. நிகழ்ச்சிக்கு அதிமுக, பாஜவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம். எங்களை பொறுத்தவரை அதிமுக, பாஜ வேறு வேறு இல்லை. இரண்டு கட்சிகளையும் நாங்கள் ஒன்றாகத்தான் பார்கிறோம். வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படத்தை முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட உள்ளார்’’ என்றார்.

Related Stories: