இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 2வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிக்கான நிதான அணுகுமுறையை கடைப்பிடிக்காமல், டி20 போல அதிரடியில் இறங்கும் ‘பேஸ்பால்’ வியூகத்தை கடைப்பிடித்ததே முதல் டெஸ்டில் தோல்விக்கு முக்கிய காரணம் என கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. எனினும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த அந்த அதிரடி தான் உதவியது என்பதால், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதே வியூகத்தை தொடர்வதில் ஆர்வமாக உள்ளார். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது, 2வது டெஸ்டின் முடிவில் தெரிந்துவிடும். பதிலடி கொடுக்க இங்கிலாந்தும், 2-0 என முன்னிலை பெறுவதுடன் தொடரையும் கைப்பற்ற தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுவதால் இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: