×

பெண் வழக்கறிஞருக்கு வரதட்சணை கொடுமை வக்கீல் கணவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அம்பத்தூரைச் சேர்ந்த நெப்போலியன் சாக்ரடீஸ் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியும் வழக்கறிஞர்தான். இந்நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நெப்போலியன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று அவரது மனைவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த திருவள்ளூர் சமூகநலத்துறை அதிகாரி, வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று கூறி புகாரை முடித்து வைத்து விட்டார் என்று வாதிட்டார்.  மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, மனுதாரர் தன் மனைவியை மோசமான முறையில் அடித்து கொடுமை செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags : Dowry , Dowry abuse of woman lawyer Dismisses anticipatory bail plea of lawyer husband: High Court orders
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்