கடற்கரை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: கீழ்ப்பாக்கம், குட்டி தெருவை சேர்ந்தவர் ஆசீர்வா (29). இவர், எழும்பூரில் ரயில்வே பாதுகாப்பு படையில் காவலராக உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்களில் ஆசீர்வாவிற்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். அப்போது அப்பெட்டியில் வெள்ளை சட்டை, லுங்கி அணிந்திருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் பயணிப்பதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஓடும் ரயிலிலேயே பெண் காவலரை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு, வளைவில் ரயில் மெதுவாக சென்றபோது கீழே குதித்து தப்பினார். இதில் படுகாயம் அடைந்த ஆசீர்வாவை பயணிகள் மீட்டு, கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புகாரின்பேரில் எழும்பூர் ரயில்போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: