×

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்: ராகுல், பிரியங்காவும் செல்கின்றனர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக தனது மகன் ராகுல், மகள் பிரியங்காவுடன் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்  சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கின்றார். டெல்லி திரும்புவதற்கு முன்  தனது தாயாரையும் அவர் சந்திக்கின்றார். ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் அவருடன் செல்கின்றனர்.

ராகுல்காந்தி காங்கிரஸ் பேரணியில் செப்டம்பர் 4ம் தேதி உரையாற்றுகின்றார்’ என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை வருகின்ற 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தலைவர் சோனியா  வெளிநாடு செல்கின்றார். எனினும் எந்த தேதியில் சோனியா வெளிநாடு  செல்கின்றார் என்பது குறிப்பிடப்படவில்லை. காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ள நிலையில், சோனியா, ராகுல், பிரியங்கா வெளிநாடு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

* யாருக்கும் தெரியாது
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், ‘‘கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்ல இருப்பதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன். நான் கட்சியின் தலைவராக வருவேனா என்பது குறித்த ஊகங்கள் நீண்ட நாட்களாக ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கின்றது. என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது’’ என்றார்.

* காங். யூடியூப் சேனல் நீக்கம்
காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘நமது யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதனை சரிசெய்கிறோம். கூகுள் மற்றும் யூடியூப் குழுவினருடன் தொடர்பில் இருக்கின்றோம். தொழில்நுட்ப கோளாறா அல்லது நாசவேலை காரணமா என்பது குறிதூது விசாரிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் காங்கிரஸ் யூடியூப் சேனல் செயல்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் தனது தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த கடிதத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் தற்போது முடிவு எடுப்பவர்களின் கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வையானது இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் விருப்பத்திற்கு ஒத்துபோகவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sonia Gandhi ,Rahul ,Priyanka , Sonia Gandhi travels abroad for medical check-up: Rahul, Priyanka also go
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!