×

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றம்; ‘பாஸ்டேக்’ வசூல் முறையை ரத்து செய்ய முடிவு? ‘நம்பர் பிளேட் ரீடர்’ திட்டம் வருகிறது

புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக ெசல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் - சில்லறைத் தட்டுப்பாடு - எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 90% சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில், ஃபாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் ஒரு நுழைவாயிலில் மட்டுமே, சுங்கவரியை பணமாகச் செலுத்த முடியும். இருந்தும் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும். பின்னர், அந்த நம்பர் பிளேட் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ‘நம்பர் பிளேட் ரீடர்’ கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுங்கக் கட்டணம் செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனங்கள் வழங்கும் நம்பர் பிளேட்டை வாங்கி சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து வாகனங்களுக்கும் இதுபோன்ற நம்பர் பிளேட்களை தங்களது வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். இதற்கான புதிய மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அந்த மசோதா சட்டமாகும் போது, சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் கட்டண வசூல் முறை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஓராண்டில் முடிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Bastake , Removal of customs booths across the country; Decision to cancel the 'passtag' collection system? The 'Number Plate Reader' project is coming up
× RELATED சுங்கச்சாவடியில் காத்திருக்கும்...