×

நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகளின் திறன் அதிகரிப்பு; மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் பருவமழைக் காலத்தில் தேங்கும் மழைநீரில் ஒரு நிமிடத்திற்கு 11,700 லிட்டர் அளவிற்கு மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு மோட்டார் பம்புகளின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகரில் உள்ள 16 சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரானது மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.  

இதில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீரை வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேறும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் ஏற்கனவே 10 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 1,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட 2 மோட்டார் பம்புகளும், 7.5 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட 1 மோட்டார் பம்பு, 20 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 3,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார் பம்பும் நிறுவப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  

மழைக்காலங்களில் மின்தடை ஏற்பட்டால் இந்த மோட்டார் பம்புகளை இயக்க ஏதுவாக 62.5 KVA திறன் கொண்ட ஜெனரேட்டரும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் மிக அதிக கனமழை பெய்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை சாலையானது, மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே, வருகின்ற பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக சுரங்கப்பாதையிலிருந்து மழைநீரை வேகமாக வெளியேற்ற கூடுதலாக 22 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 4,200 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட நீரில் மூழ்கக்கூடிய மோட்டார் பம்பு புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.  

இதன்மூலம் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் கடந்த காலங்களில் 47.5 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 7,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறனுடன் இருந்த மோட்டார் பம்புகளின் செயல்திறன் தற்சமயம் கூடுதலாக பொருத்தப்பட்ட மோட்டார் பம்பின் மூலம் 69.5 குதிரைத் திறன் மற்றும் நிமிடத்திற்கு 11,700 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Nungambakkam Tunnel , Increase in capacity of motor pumps for draining rainwater in Nungambakkam Tunnel; Corporation action
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...