×

போதைபொருட்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யும் 1,452 குற்றவாளிகள் மீது ஒரு நாள் சிறப்பு தணிக்கை

சென்னை: சென்னை பெருநகரில், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போதைபொருட்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதான ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 1,452 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு 136 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive aginst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்  கஞ்சா மற்றும் போதைபொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகளுக்கு  எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், நேற்று (23.08.2022) கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த சிறப்பு தணிக்கையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,452 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். நேற்று (23.08.2022) மட்டும் 136 குற்றவாளிகள் செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இது வரை போதை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 381 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 396 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதாக சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம்  எழுதிக்கொடுத்துள்ளனர். சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, காவல் ஆணையாளர் அவர்கள் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், குற்ற பின்னணி நபர்கள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள்  மீண்டும்  குற்றச் செயல்களில் ஈடுபடாமல்  தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப  அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Narcotics, sale, special audit
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை