×

கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடப்பட்ட 6 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சிவன் கோயிலில் திருடப்பட்ட 6 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொன்மையான, பல்வேறு சிலைகள் வெளிநாட்டில் இருப்பதாய் தொடர்ந்து கண்டுபிடித்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு சிலைகள், குறிப்பாக தஞ்சாவூர் பகுதியில் சரபோஜி மன்னர் நூலகத்தில் இருக்கக்கூடிய பொக்கிஷங்கள் அனைத்தும் எங்கெங்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் உள்ள மாரீஸ்வரன் என்ற சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 6 உலோக சிலைகள், தற்போது அமெரிக்காவில் உள்ளது என சிலைகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 1956ம் ஆண்டு இந்த சிலைகள் காணாமல் போனதாகவும், திருடு போனதாகவும் தெரியவந்தது. குறிப்பாக பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் ஆப் பாண்டிச்சேரி என்ற ஆய்வகத்தில், இந்த சிலைகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில் அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இந்த 6 சிலைகளும் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், காணாமல் போன நடராஜர் சிலை, வீனாதாரி தட்சிணாமூர்த்தி சிலை, துறவி சுந்தரர் மற்றும் பார்வதி தேவியுடன் இருக்கும் சிலை, திரிபுராந்தகம் மற்றும் திரிபுர சுந்தரி சிலை என 6 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடராஜர் சிலை, வீனாதாரி தட்சிணாமூர்த்தி சிலை 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த துறவி சுந்தரர் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவியுடன் இருக்கும் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி ஏலம் எனப்படும் ஏல தலத்திலும், கீவ்லேண்ட் மியூசியம் ஆர்ட் என்ற அருங்காட்சியகத்திலும் உள்ளதாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், கண்டறியப்பட்ட 6 சிலைகளும் தமிழகத்தில் இருந்து கொண்டு கடத்தப்பட்டது என்பதை தடயவியல் நிபுணர்கள் மற்றும் சிலை ஆராய்ச்சி நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் தற்போது சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kallakurichi ,Shiva ,US , Kallakurichi, Shiva Temple, 6 Metal Statue, America, Discovery
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்