ஓசூர் அருகே சூளகிரி-சின்னாறு அணை நீர்மட்டம் உயர்ந்தால் தீவாகும் கிராமம்: மேம்பால பணிகளை உடனே தொடங்க கிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே சூளகிரி, சின்னாறு அணைக்கு அருகே அமைந்துள்ள போகிபுரம் கிராமத்துக்கு உரிய சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் மற்றும் பள்ளி சென்ற வர தினசரி ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொள்ளக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பால பணிகளை முடித்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி, சின்னாறு அணை கட்டுமான பணிகளுக்காக காமநாயகன் பேட்டை ஒண்டியூர் கிராம மக்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் அணைக்கு மத்தியில் உள்ள போகிபுரம் கிராமத்தினர் அங்கேயே வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது சுமார் 100 குடும்பங்கள் போகிபுரத்தில் வசித்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் அதிகாரிக்கு நேரத்தில் போகிபுர கிராமத்திற்கு சென்று வரும் சாலை தண்ணீரில் மூழ்கி விடுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக செல்வோர் பரிசல் மூலம் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகால கோரிக்கைக்கு பின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் போகிபுரம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 30 சதவித பணிகள் மட்டுமே நடந்த நிலையில் அணையில் நீர்வரத்து அதிகமானதால் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை கைவிட்டது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கடந்தும் மேம்பால பணிகள் தொடக்கப்படாமல் இருப்பதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறும் கிராம மக்கள் உடனடியாக பாலம் கட்டும் பணிகளை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை வசதி இல்லாததால் போகிபுரம் கிராமத்தில் இருந்து ஏராளமான குடும்பத்தினர் நகரத்துக்கு இடம் பெயரும் சூழலும் உள்ளது. எனவே, உடனடியாக மேம்பாலம் கட்டுமான பணிகளை முடித்து சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என போகிபுரம் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். 

Related Stories: