×

தாராபுரம் அருகே வீரத்தை பறைசாற்றும் 1000 ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வீரத்தை பறைசாற்றும் 1000 ஆண்டு பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்தல், இரும்புக் கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை அண்மையில் வெளிப்படும் அகழாய்வு மற்றும் வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது.

ஓர் இடத்தில் மிகுதியாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காகப் பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர்.

அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள் எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளதை நாம் இங்கு கிடைக்கும் எண்ணற்ற நடுகற்கள் மூலம் அறிய முடிகிறது.

 திருப்பூரில் இயங்கி வரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னப்புத்தூர் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து ரவிக்குமார் கூறியதாவது: சங்க இலக்கியங்களில் நடுகற்கள் நடும் இடங்களாக நீர்நிலைகள், பண்டைய பெருவழிகள், ஊர் மன்றம் மற்றும் சாலைகள் சந்திக்கும் இடம் ஆகியவை உள்ளது. இப்போது கிடைத்துள்ள நடுகல் பண்டைய காலம் முதல் இன்று வரை தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பெருவழியில், தாராபுரத்தில் இருந்து 12.கி.மீ. தொலைவில் உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் கிடைத்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 50 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் உள்ள இந்த நடுகல் இங்குள்ள ஓர் ஆல மரத்திற்கு கீழ் உள்ளது. இதில், இரண்டு மாவீரர்களின் உருவம் அழகோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளான். இரண்டாவது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்து சற்றே சாய்ந்தவாறு உள்ளான். இரு வீரர்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன.

தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனர். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனர். இடையில் மட்டும் மடிந்த மிகவும் நேர்த்தியான ஆடை அணிந்துள்ள இம்மாவீரர்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளனர்.

எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும், இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு- சிவப்பு பானை ஓடுகள் மற்றும் இரும்புக் கசடுகள் மூலம் சின்னப்புத்தூர் கிராம மக்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்து வந்ததை  நாம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tarapuram , A 1000-year-old middle stone extolling heroism is found near Tarapuram
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...