×

வருசநாடு பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை குறைவு

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேங்காய் ஒன்று 11 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது 8 ரூபாய் முதல் 9 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

மேலும், உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் வரத்து உள்ளதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். போதுமான விலை இல்லாத போது விவசாயிகள் தேங்காய்களை உடைத்து வெயிலில் காயவைத்து எண்ணெய் தயாரிப்பிற்காக அனுப்புவது வழக்கம். ஆனால் தற்போது கொப்பரை தேங்காயின் விலையும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்களில் மற்றும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varusanadu , Due to increase in production in Varusanadu region, coconut prices are low
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?