ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது: ஹரியானாவில் அம்ரிதா மருத்துவமனையை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு..!!

சண்டிகர்: ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பரிதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஹரியானா மக்களுக்கு மிகப்பெரிய அளவில் மருத்துவ வசதியை ஏற்படுத்தி தரும் நோக்கில், 2,500 படுக்கை வசதிகளுடன் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அம்ரிதா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில், 81 சிறப்புப் பெற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கவும், முழுவதும் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட 64 அறுவைசிகிச்சைக் கூடங்களும், பல முன்னேறிய வசதிகளுடன் கூடிய ஐசியு மற்றும் 534 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது. பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே ஒன்றிய அரசின் இலக்கு. ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.

நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை மூலம் சுகாதாரமுறை நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் எனவும் குறிப்பிட்டார். இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அம்ரிதா மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவமனை என்ற பெருமையைப் பெறுகிறது. அன்பு, சேவை, கருணை, தியாகம் ஆகியவற்றின் வடிவமாக மாதா அமிர்தானந்த மயி திகழ்வதாக பாராட்டு தெரிவித்த பிரதமர், அவர் நம் அனைவருக்கும் ஊக்கத்தை அளிப்பவராக திகழ்கிறார் எனவும் கூறினார்.

Related Stories: