நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்!: பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!!

சென்னை: நாளை நடைபெற இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புகளில் சேர்ந்த விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தாண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியீடு இல்லை. பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 4 சுற்றுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, நாளை தொடங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும். காலியிடங்களை தடுக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தை தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: