×

போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!!

சென்னை: போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அத்தியாவசிய பொருட்கள் விலை, மறுபுறம் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகன சோதனை மைய அங்கீகார புதுப்பிப்பு கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.3,000 ஆக, அதாவது ஆறு மடங்கு உயர்த்தவும், இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.200 ஆக, அதாவது 2 மடங்கு உயர்த்தவும், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும், சி.எப்.எக்ஸ் அறிவிப்பினை திரும்ப பெறும் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக, கிட்டத்தட்ட 16 மடங்கு உயர்த்தவும், தற்காலிகப் பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக, அதாவது 4 மடங்கு உயர்த்தவும், பிற மண்டல வாகனங்களின் தகுதிச் சான்றுக்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 500 ரூபாயாக நிர்ணயிக்கவும்; ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக, அதாவது 5 மடங்கிற்கு மேல் உயர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் மீது தொடர்ந்து கூடுதல் நிதிச் சுமையை திணிக்கக்கூடாது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகத் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


Tags : O. Panneerselvam ,Tamil Nadu government , Transport Service, Fares, Government of Tamil Nadu, O. Panneerselvam
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி....