வாலாஜாபாத் பேரூராட்சியில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாலாஜாபாத் பேரூராட்சியின் மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இல்லா மல்லி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, பேரூராட்சியின் வரவு, செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் என்னென்ன பணிகள் செய்வது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மேலும், மழைக்காலங்களுக்கு முன்பே கால்வாய்களை தூர் வாருவது சாலைகளை சீரமைப்பது  உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பேரூராட்சி 2வது வார்டில் உள்ள புண்ணியநாதன் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைப்பது, பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கம் செய்வது, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகாமையில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா உட்பட வார்டு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: