×

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கும்பாபிஷேகம் பங்காரு அடிகளார் தலைமையில் நடந்தது

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தலைமையில் உடுமலைப்பேட்டையில் உள்ள, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் கும்பாபிஷேக விழா நடத்தி வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சர்தார் வீதி பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்  சக்தி பீடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை மிக விமர்சையாக நடந்தது. இந்த விழாவிற்காக உடுமலைப்பேட்டை பகுதிக்கு சென்ற பங்காரு அடிகளாருக்கு வழிநெடுகிலும் பக்தர்களும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து, சித்தர் பீடத்தை வந்தடைந்த பங்காரு அடிகளாருக்கு உடுமலைப்பேட்டை சித்தர் பீட நிர்வாகிகள் பாதபூஜை செய்து வரவேற்றனர்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பங்காரு அடிகளார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். கருவறையிலுள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். இதனை தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ்,  ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இதேபோன்று 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளைக்கோயிலில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து பங்காரு அடிகளார் மூன்று ஜோடிகளுக்கு இலவச  திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன், ஓய்வு பெற்ற தென்னிந்திய  ரயில்வே அதிகாரிகள்  ஜெயந்த் சிவாநந்தம், திமுக மண்டல பொறுப்பாளர்  பத்மநாபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட  பொறுப்பாளர்கள் மற்றும் வெள்ளக்கோயில், உடுமலைப்பேட்டை  சக்தி பீடங்களை சார்ந்த செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.

Tags : Shakti ,Kumbaphishekam ,Bangaru , Kumbabhishekam was conducted at Adiparashakti Siddhar Shakti Peetha under the leadership of Bangaru Adikalar
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...