சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், ரயில்வே நடைமேம்பாலம் திறப்பு அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் ரயில்வே நடை மேம்பாலங்களை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட கும்மாளம்மன் கோயில் தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு புதிய சமுதாய நலக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதைதொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே மூலதன மானிய நிதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.    

 

அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள பல்நோக்கு கட்டடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சமுதாய நலக்கூடமானது தரைத்தளம் 2,800 ச.அ. பரப்பளவிலும், முதல் தளம் 2,800 ச.அ. பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கூடத்தில் ஒருநாள் வாடகையாக ரூ.8800ம், அரைநாள் வாடகையாக ரூ.4400ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே தெற்கு பகுதியிலுள்ள ரயில்வே நடை மேம்பாலத்தை சுடுகாடு அணுகுசாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் 24.6 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் அகலம் கொண்ட இரும்பாலான நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் நீளம் 130 மீட்டர் மற்றும் அகலம் 3 மீட்டர் ஆகும்.

இந்த நடைமேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையில் ரூ.5.42 கோடியை மூலதன மானிய நிதியிலிருந்தும் மின்விளக்குகள் அமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.75 லட்சத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் எழிலன், எம்.கே.மோகன், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ். மதன்மோகன், கூ.பி.ஜெயின், கவுன்சிலர் வசந்தி பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: