×

சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது; நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறுவாபுரியில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கடந்த 21ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மண்டல பூஜையின் 2ம் நாளான நேற்று சிறுவாபுரியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மண்டல பூஜை ஒருபுறம், கும்பாபிஷேகம் முடிந்த முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனம் மற்றும் ரூ.50, ரூ.100ம் கட்டணம் செலுத்தி அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருந்து மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Tags : Siruvapuri Murugan Temple ,Sami darshan , Devotees thronged Siruvapuri Murugan Temple; Sami darshan after waiting for a long time
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...