சுயதொழில் தொடங்க விருப்பம், உள்ளவர்கள் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தற்போதைய திமுக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்கும் திட்டம், நில அபிவிருத்தி திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருந்தகம் அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் //application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் //fast.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ரூ.3 லட்சம் ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விலைப்புள்ளி ஜிஎஸ்டிஐஎண் எண்ணுடன், திட்ட அறிக்கை ஓட்டுநர் உரிமம் வாகனக் கடனுக்கு மட்டும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்வித் தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் தொலைபேசி எண் - 044-27665536, கைபேசி எண். 9445029475 அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: