×

ஆத்தூர் அருகே அதிகாலையில் பயங்கரம் கார் மீது பஸ் மோதியதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி: துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

ஆத்தூர்: சேலத்தை அடுத்த ஆத்தூர் அருகே நேற்று அதிகாலை கார் மீது, ஆம்னி பஸ் மோதியதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் தீவிர சிகிச்சை ெபற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் ராஜேஷ் (29). மெக்கானிக். இவர் தங்கை ரம்யா (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சித்தப்பா மயில்வாகனம் மகள் சந்தியா (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆம்னி காரில் சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சென்றுள்ளார்.

ஆத்தூர் லீபஜாரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த 30ம் நாள் துக்க காரியத்தில் கலந்து கொண்டுவிட்டு அதிகாலை 1.30 மணியளவில் உறவினர்களான ஆத்தூர் முல்லைவாடியை சேர்ந்த சரண்யா (23), சுகன்யா (27), அவரது 11 வயது மகள் தன்ஷிகா, பெரியண்ணன் (23), புவனேஸ்வரி (17), கிருஷ்ணவேணி (45), உதயகுமார் (17), சுதா(35) ஆகியோருடன் மொத்தம் 11 பேர் காரில் டீ குடிக்க புறப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் துலுக்கனூர் கிராமம் அருகே சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடையில் அதிகாலை 1.30 மணியளவில் டீ குடித்து விட்டு மீண்டும் துக்க வீட்டுக்கு புறப்பட்டனர். காரை ராஜேஷ் ஓட்டியுள்ளார்.  ஆத்தூர் சர்வீஸ் ரோட்டில் செல்வதற்கு காரை திருப்பியபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது.

காரில் இருந்த 11 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். தகவலறிந்து ஆத்தூர் டவுன் போலீசாரும், தீயணைப்புத்துறை வீரர்களும் வந்து காருக்குள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 11 பேரையும் மீட்டனர். இதில், ராஜேஷ், ரம்யா, சந்தியா, சரண்யா, சுகன்யா ஆகியோர் அங்கேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த தன்ஷிகா, பெரியண்ணன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, உதயகுமார், சுதா ஆகிய 6 பேரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தன்ஷிகா உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 6 ஆனது. படுகாயமடைந்த மற்ற 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் மீது மோதிய ஆம்னி பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Attur , In the early hours of the morning, a bus collided with a car and 6 people were killed
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...