×

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வை குறைக்க பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: கோவை ஈச்சனாரியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக, அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மின்சார துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மக்களிடம் மின்சார ஆணைய ஒழுங்கு முறை ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதுவரை கோவை, மதுரை, சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிறு, குறு தொழில் நடத்துவோர், தொழில் முனைவோர்கள், நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தமிழக அரசு உயர்த்துவதாக உத்தேசித்துள்ள கட்டணத்தில், தங்களுக்கான  பிக்சட் சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.  இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இரண்டொரு நாளில் ஒழுங்குமுறை ஆணையம் நல்ல தகவலை தெரிவிக்கும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான   மின்கட்டண உயர்வை குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்க உள்ளோம். மற்ற மின் கட்டண உயர்வில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Senthilbalaji , Small and Micro Enterprises, Electricity Tariff Hike, Minister Senthil Balaji
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...