போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: குரோம்பேட்டையில், நேற்று நடைப்பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் அடிப்படையிலான, 7ம் கட்ட பேச்சுவார்த்தை இன்றும் நடைப்பெறும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கோரிக்கை வைத்தன்பேரில், பேமேட்ரிக் முறையில் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஒப்பந்த பேச்சுவார்த்தை 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் என அறிவித்தது. ஏற்கனவே, உள்ளதுபோல் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,  7 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் உள்ள ஓய்வூதியத்துக்கான அகவிலைபடியை உயர்த்தி வழங்க போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கான 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்டப்பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. ஏற்கனவே நடைபெற்ற 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், நேற்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 66 தொழிற்சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து, அவர்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இவ்வாறு தொடர்ந்து, சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக, அனைத்து தொழிற்சங்க முக்கிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிமுதல், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை  நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து முதன்மை செயலாளர் கே.கோபால், நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் மற்றும் 8 போக்குவரத்துகழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: