×

சென்னை, வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரியில் தோல் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு: 60 இடங்களில் நடந்தது

ஆம்பூர்: சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 60 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பரிதா குழுமத்தின் தோல் உற்பத்தி தொழிற்சாலை ஆம்பூர் அடுத்த துத்திபட்டு, பேரணாம்பட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் நகரில் இயங்கி வருகிறது. அதேபோல் ஆம்பூர் அம்பேத்கர் நகர், மோட்டுக்கொல்லை, துத்திப்பட்டு, சின்னவரிக்கம் உள்ளிட்ட இடங்களில் ஷூ உற்பத்தி மற்றும் ஷூ உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த குழுமத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஆம்பூர், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஒடுகத்தூர், குடியாத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் திருப்பத்தூர், ஒடுகத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் தொழிற்சாலைகளும் உள்ளன. சென்னையில் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பெருமளவு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து ஆம்பூரில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளுக்கு நேற்று வருமானவரித்துறையினர் 25 கார்களில் வந்தனர். வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமயில் 100 அதிகாரிகளும், பாதுகாப்பிற்காக காரில் சென்னையில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீசார் 90 பேரும் வந்தனர். தொழிற்சாலைகளுக்குள் சென்ற வருமான வரித்துறையினர் அங்கிருந்த போன், இன்டர்நெட் இணைப்புகளை துண்டித்தனர். அனைவரது செல்போன்களையும் கைப்பற்றினர். தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை தொடர அறிவுறுத்தினர். செக்யூரிட்டிகளின் செல்போன்களையும் கைப்பற்றிய வருமான வரித்துறையினர் அங்கு பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய போலீசாரை நிறுத்தி கண்காணித்தனர். நிறுவனங்களின் பதிவேடுகள், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டம் பெருமுகையில் இயங்கி வரும் கே.எச். ஷூ கம்பெனியிலும் 3 கார்களில் வந்த 8 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் கே.எச். குழுமத்திற்கு சொந்தமான 2 தோல் தொழிற்சாலைகள், ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள தோல் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் 10 வீடுகள் என மொத்தம் 13 இடங்களுக்கு 50 கார்களில் வந்த 150 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

சென்னையில் 10 இடங்களில் சோதனை: சென்னை ராமாபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலை அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதேபோல நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இப்படி ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரிதா, கே.எச் குழுமங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டு நேற்று இரவு வரை நீடித்தது.

* லீவு போட்டு ஊழியர்கள் ஓட்டம்
ஆம்பூரில் உள்ள பரிதா நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் நேற்று வேலைக்கு வந்தனர். அப்போது வருமான வரிதுறையினர் மற்றும் போலீசார் அங்கு இருப்பதை கண்டனர். அதனால், நாங்க இன்னைக்கு லீவு எனக்கூறி பல தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். வேலைக்கு வருமாறு அழைத்தும் பலர் அதை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர். ரெய்டு முடியும் வரை யாரையும் வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள் என பரவிய தகவலால் பலர் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

Tags : Chennai ,Vellore ,Tirupattur ,Puducherry , Income Tax raids on leather factories in Chennai, Vellore, Tirupattur, Puducherry: 60 locations
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...