நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து: தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக 10 நாளில் ராஜாசிங் விளக்கம் அளிக்கவும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் என்பவர், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மேடை நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மற்றொரு பரபரப்பாக நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நபிகள் நாயகம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசி சர்சைக்குள்ளான பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலிறுத்துவதாக வீடியோ ஒன்றில் வெளியிட்டார். இந்த வீடியோவானது வைரலாக மாறிய நிலையில்,  எம்.எல்.ஏ.வின் பேச்சை கேட்ட இஸ்லாமியர்கள் மற்றும் MIM கட்சியை சேர்ந்தவர்கள் பலர் நேற்றிரவு அவரது வீட்டை முற்றுகையிட்டதோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யக்கோரி பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை இன்று காலை தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாகவும், நீக்கம் எதற்காக செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் குறித்து 10 நாட்களுக்குள், அதாவது செப்.2ம் தேதிக்குள் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என கட்சியின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: