×

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்; டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. இத்தேர்வுக்கு  3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம் முடிந்தது.

இறுதி நாளான நேற்று நள்ளிரவு வரை ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், ”டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 3  லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார். குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், ஒரு பதவிக்கு 3442 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : DNBSC , 3.16 lakh applications for Group 1 exam including Deputy Collector, Police DSP; TNPSC Secretary Information
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு