பிரீமியர் லீக் கால்பந்து; லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

லண்டன்: பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று அதிகாலை ஓல்டு ட்ராஃபோர்டில் நடந்த போட்டியில் லிவர்பூல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீழ்த்தியது. பிரீமியர் லீக் கால்பந்து தொடர் போட்டிகள் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன. இன்று அதிகாலை ஓல்டு ட்ராஃபோர்டில் நடந்த போட்டியில் வலிமையான மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின.

நடப்பு பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. 16வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்கள வீரர் ஜேடன் சான்ச்சோ, சக வீரர் ஆந்தனி எலங்கா கடத்தி வந்து வந்து கொடுத்த பந்தை அற்புதமாக வாங்கி, அழகாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.

இதையடுத்து முதல் பாதி ஆட்ட முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் சென்டர் ஃபார்வர்ட் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் மொகமது சலாஹ், மிகத் திறமையாக பந்தை கடத்தி வந்து, ஒரு கோல் அடித்தார். இதையடுத்து மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள், ஆட்டத்தின் கடைசி 10 நிமிடம் முழுவதும் தற்காப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இறுதியில் ஒரு வழியாக இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, லிவர்பூல் அணியை வீழ்த்தி, இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related Stories: