நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை

பல்லடம் : நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பல்லடம் அரசு மருத்துவமனை மக்களுக்கு முழுமையான சேவையாற்ற முடியாமல் திணறி வருகிறது. இதனால், உரிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி 800க்கும் அதிகமான புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 50 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி., கர்ப்ப கால சிகிச்சை, குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகளுக்கு நவீன ஸ்கேன் வசதி, பல் பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவம் என சகல வசதிகளும் உள்ளது. 16 மருத்துவர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.

ஆனால், 14 செவிலியர்கள் பணியிடத்திற்கு 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 1 சமையலர், 1 துப்புரவு பணியாளர், 1 அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர், 1 அவசர சிகிச்சை பிரிவு உதவியாளர், 4 மருத்துவமனை உதவியாளர்கள், ஒரு மருந்தாளுனர் ஆகிய பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.

அதேசமயத்தில் சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் திருப்பூர், கோவைக்கு முதலுதவி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 91 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. 100க்கும் மேல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து பணியிடங்களை நிரப்பி தேவையான வசதிகளை செய்து தந்தால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாலுகா தகுதி உடைய பல்லடம் அரசு மருத்துவமனையை 2022 - 2023ம் ஆண்டுக்கான தேசிய தரம் உயர்வு திட்டத்தின் கீழ் மேம்படுத்த கடந்த ஜூன் மாதம் தேர்வு செய்து, ரூ.5 லட்சம் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, இம்மருத்துமனையை மேம்படுத்த தினசரி கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து பல்லடம் அரசு தலைமை மருத்துவர் ராமசாமி கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர் (எம்.எஸ்), பொது மருத்துவ ஆலோசக மருத்துவர் (எம்.டி), மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர், நுரையீரல் பிரிவு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றனர்.

24 மணி நேரமும் பணியில் மருத்துவர் உள்ளார். கடந்த 6 மாதத்தில் 336 பேருக்கு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 29 பேருக்கும், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை 233 பேருக்கும், மகப்பேறு 19 பேருக்கும், பல் சிகிச்சை 587 பேருக்கும், கொரோனா தொற்று பரவல் காலத்தில் 799 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளில் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நோயாளி பயன்படுத்திய பின்னர் அடுத்து வரும் நோயாளிக்கு வேறு புதிய படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது.

வார்டுகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு  வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், பார்வையாளர்கள் தூய்மை பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தரமான சிகிச்சை சிறந்த மருத்துவர்களை கொண்டு வழங்கப்படுகிறது. சேவையை பாராட்டும் வகையில் ரோட்டரி, அரிமா உள்பட பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்பினர் சமூக ஆர்வலர்கள், தனியார் அறக்கட்டளையினர் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பல்லடம் வட்டாரத்தில் தென் மாவட்ட மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிகம்  வசிக்கின்றனர். இவர்கள் சிகிச்சைக்கு  எங்கு செல்வது என தெரியாமல் மொழி  பிரச்னையில் குழப்பம் அடைகின்றனர். மேலும், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோரை கோவை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதும் நோயாளிகளை அலைக்கழிப்புக்கு ஆளாக்குகிறது. போதிய நர்சுகள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், சமையல் பணிக்கு ஆட்கள் இல்லை. எனவே மருத்துவமனைக்கு தேவையான ரத்த வங்கி உள்ளிட்ட பிற வசதிகளை மேம்படுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Stories: