பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் கருவிலிருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்தால் நடவடிக்கை-விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் : கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய ஸ்கேன் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன் போதிய அளவு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் 1000க்கு, 918 குழந்தைகள் பாலின விகிதமும், தமிழகத்தில் 1000க்கு, 943 குழந்தைகள் பாலின வீதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2021-2022 கணக்கெடுப்பின்டி விழுப்புரம் மாவட்டத்தில் பாலின விகிதம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதையே தொடர்ந்து நீடித்திடும் வகையில் பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், பெண் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி கற்க உறதுணையாக இருந்திடும் வகையில் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி பாதுகாத்திட வேண்டும். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதற்கு ஸ்கேன் சென்டர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறுகள் நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், இளம்வயது பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை உரிய காலத்தில் வழங்கி தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் நடத்துவதை தடைசெய்து பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பொதுவாக, பெண் குழந்தை பிறப்பினை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவேன். மகளும், மகனும் சமம் என கருதி வளர்ப்பேன்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பேன். பாலினம் சார்ந்த பொறுப்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்க்கும் விதமாக ஆண்கள் மற்றும் சிறுவர்களை மாற்றும் பணியில் ஈடுபடுவேன். பெண்களுக்கு பாதுகாப்பான வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவேன் என்ற நிலைபாட்டுடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறையாமல் பாதுகாத்திட போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பெண் சமுதாயத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இதில் சமூகநல அலுவலர் ராஜம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories: