×

செய்யூர் அருகே கொடூர் கிராமத்தில் ரூ.45.94 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை பணிகள் தொடங்கியது

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில், விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. பிற தொழில் வளம் இல்லாத காரணத்தால் செய்யூர் வட்டாரத்தில் பட்டப்படிப்பு முடித்து நல்ல நிலையில் உள்ள பலர் தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்காக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், ஒரகடம், புதுச்சேரி உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில், பலர் வெளியிடங்களிலேயே தங்கி பணிபுரிந்தும் வருகின்றனர். இப்படி இருக்க செய்யூர் தொகுதியில் வசிக்கும் மக்கள் செய்யூர் வட்டாரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அரசுக்கு  நீண்டாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. தற்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உருவானதையடுத்து செய்யூர் தொகுதி மக்கள் விடுத்த கோரிக்கையினை பரிசீலனை செய்யப்பட்டது. இதனையடுத்து, முதற்கட்டமாக செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொடூர் ஊராட்சியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.45.94 கோடியில் சிட்கோ தொழில் பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சட்டசபையில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தொழிற்பேட்டை அமையவுள்ள நிலத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் துவங்கிய நிலையில் முதற்கட்டமாக சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், செய்யூர் வட்டார மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து செய்யூர் வட்டார மக்கள் கூறுகையில்,‘எங்கள் பகுதியின் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே என்றாலும் எங்கள் பகுதியில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு சென்று பணிபுரிவதால் அலைச்சல், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்ப முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது, எங்களது நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு எங்கள் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்க முடிவு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இது எங்கள் பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு உருவாக்கப்படும் தொழிற்பேட்டையால் செய்யூர் வட்டார மக்கள் மட்டுமின்றி பிறபகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். செய்யூர் தொகுதியே வளம் பெறும். குறிப்பாக, கிராம புறங்கள் வளம் பெறும். எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்த தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’என்றனர்.

Tags : CITCO ,Kauraik ,Seyyur , CITCO industrial estate works started at Rs 45.94 crore in Kauraik village near Seyyur
× RELATED காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ...