×

பார்க்கிங் பகுதியாக மாறிய அனகாபுத்தூர் பஸ் நிலையம்; பயணிகள் சிரமம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளான தாம்பரம், பிராட்வே, கோயம்பேடு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பம்மல், அனகாபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையம் வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பேருந்துகள் பேருந்து உள்ளே எளிதாக வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சிரமப்பட்டு உள்ளே வரும்போது, அங்கு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது, பேருந்துகள் உரசி அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதையே காரணம் காட்டி பல பேருந்துகள், பேருந்து நிலையத்தின் உள்ளே வர மறுத்து, பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறங்கிச் செல்கின்றன. இதனால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பிரதான சாலையில் பேருந்துகள் நின்று செல்வதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, பேருந்து நிலையத்தின் உள்ளே தங்கு தடையின்றி பேருந்துகள் வந்து செல்ல வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anagaputhur , Anagaputhur bus stand converted into a parking area; Passenger inconvenience
× RELATED பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27...