×

அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம்: விதிகளை வகுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  ராஜபாளையம் அருகே சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத். திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் தனது மகன் கொலை வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராக பவானி ப.மோகனை நியமிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீ.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு:
 
இதைப்போல திருச்சியிலுள்ள ஒரு வழக்கிலும் பவானி ப.மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கக் கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது. இரு மனுக்களிலும் ஒரே காரணம் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னாவின் கவனத்திற்கும் சென்றுள்ளது. அவர் சிறப்பு சட்டத்தின் கீழான வழக்குகளை முறையாக அரசுத் தரப்பில் நடத்துவது குறித்து அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு வழங்கியுள்ளார்.

அவரது இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. விழிப்புணர்வுடன் இருந்து சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டிட திறமையான அரசு வழக்கறிஞர்கள் அவசியம். இதற்கென சிறப்பு விதிகளை இயற்றி, அவர்களை கண்காணிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் உள்துறைச் செயலர் மற்றும் அரசு குற்றவியல் துறை இயக்குநர் ஆகியோர்  உரிய பதிலை ஆக. 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.   இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : ICourt Branch , Appointment of Special Public Prosecutor: ICourt Branch orders to lay down rules
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...