×

கண்ணூர் பல்கலை. இணை பேராசிரியராக பினராய் விஜயனின் செயலர் மனைவி நியமனத்திற்கு தடை: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழக இணை பேராசிரியராக நியமித்த உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக நியமனம் செய்த உத்தரவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இணை பேராசிரியர் பதவிக்கான ரேங்க் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்த ஜோசப் ஸ்கரியா என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சட்டத்தை மீறி பிரியா வர்கீசுக்கு இணை பேராசிரியர் ரேங்க் பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவரது நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பிரியா வர்கீசின் நியமனத்திற்கு வரும் 31ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அன்று இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கேரள கவர்னர், கேரள அரசு, கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர், தேர்வுக் கமிட்டித் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்னை தாக்க சதி: கேரள பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது  கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே முதல்வர்  பினராயி விஜயனின் உதவியாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை, கண்ணூர்  பல்கலைக்கழக இணை பேராசிரியராக நியமிப்பதற்கு கவர்னர் கடும் எதிர்ப்பு  தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில்   கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு   கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த சரித்திர மாநாட்டில் என்னை தாக்குவதற்கு   துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தலைமையில் சதி நடந்தது’’ என்று  தெரிவித்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னர் அதிகாரம் குறைக்க மசோதா: கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது.  இந்த கூட்டம் செப்டம்பர்  2ம் தேதி வரை 10 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 அவசர  சட்டங்களையும்  மசோதாவாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  கூட்டத் தொடரில்  நாளை (24ம் தேதி) பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில்  கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் ஒரு  மசோதாவை கொண்டுவர கேரள அரசு  தீர்மானித்துள்ளது. இன்று ேலாக் ஆயுக்தா சட்டத்திருத்தம் குறித்த மசோதா உட்பட மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளது.

Tags : Kannur University ,Pinarayi Vijayan ,Kerala High Court , Kannur University. Ban on appointment of Pinarayi Vijayan's secretary's wife as associate professor: Kerala High Court order
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...