ஆவடியில் தொடர் கைவரிசை; 3 கடைகளில் திருடிய மாணவன் சிக்கினான் மற்றொருவன் தலைமறைவு

ஆவடி: பால்பூத் உள்பட 3 கடைகளை உடைத்து பணம் திருடிய பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து மற்றொருவனை தேடி வருகின்றனர். ஆவடி, காந்திநகர், அண்ணா தெருவில் சிலம்பரசன் (31) என்பவர் பால்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம்  திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அதேபகுதியில் ஜாபர்கான் (38) என்பவரின் ஆவின் பால் பூத்தும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு கல்லாவில் இருந்த ரூ.1,500 ரொக்கம் திருடுபோயிருந்தது. மேலும், அதே பகுதியில் ராஜா (37) என்பவர் மளிகைக்கடையை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.8,500 மற்றும் ரேஷன், ஆதார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து பணம் கொள்ளை போயிருப்பது அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதேபோல், திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் கதவை மர்ம நபர்கள் உடைக்க முயன்றனர். கடைக்குள் அலாரம் கேட்டதால், சரஸ்வதி நகரில் வசிக்கும் கடை உரிமையாளர் சிவகுமார் (52) காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வந்தனர். அப்போது அயனாவரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் பிடிபட்டான். போலீசார் வருவதை கண்டதும்  உடன் இருந்த 17 வயது சிறுவன் தப்பிவிட்டான். இதைத்தொடர்ந்து நேற்று 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவனது கூட்டாளி  17 வயது சிறுவன் கோயம்பேட்டில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படிப்பது தெரியவந்தது. அவனை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். 16 வயது சிறுவன் மீது வழிப்பறி, கடை உடைத்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவான பாலிடெக்னிக் மாணவனை தீவிரமாக தேடுகின்றனர்.

Related Stories: