சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை இணைக்கும் கிருஷ்ணா கால்வாய் குறுக்கே பால தடுப்பு; சுவர் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் கிருஷ்ணா கால்வாய் குறுக்கே உள்ள பாலத்தின்  தடுப்பு சுவர், சேதம் அடைந்ததால், வாகன ஓட்டிகள் சென்று வர அச்சம் அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில், பூண்டி ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய் செல்கிறது. இந்த, கால்வாயின் குறுக்கே சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக சென்னையில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சென்னைக்கும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பஸ், கார், வேன் லாரி, போன்ற கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பாலவாக்கம், தாராட்சி, பனப்பாக்கம், பேரண்டூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும், வேலை சம்மந்தமாகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், ஊத்துக்கோட்டை  எல்லைப்பகுதியில் உள்ள இந்த, கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உடைந்து உள்ளது. மேலும், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்பவர்கள் அல்லது வேலையின் நிமித்தம் வேகமாக அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள், பாலத்தின் குறுக்கே தடுப்பு சுவர்கள் சேதமாகி இருப்பதால் பாலத்திலிருந்து கீழே விழக்கூடிய அபாயம் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் தடுப்புகள் வாகனங்கள் மோதி சேதமடைந்து விட்டது. மேலும், 2015 - 2016ம் ஆண்டு வர்தா புயலில் பாலத்தின் நடுப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. எனவே, பலவீனமான இந்த பாலத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என கூறினர்.

Related Stories: