×

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே கட்டிட வளாகத்தில் கால்நடை மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் 5 கால் நடை மருத்துவமனையும், சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனுக்குடன் சிகிச்சைப் பெற்று திரும்ப முடியும். நாளொன்றுக்கு நாய், ஆடு, மாடு, கோழி, பூனை என கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர். கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள், சிகிச்சை முடிந்து உடனே வேலைக்கோ அல்லது விவசாயம் செய்யவோ செல்ல வேண்டியிருக்கும். ஆனால் கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், பெரும்பாலான மருத்துவமனைகளில் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதவி இயக்குனர் பதவியில் இருக்கும் மருத்துவர் மற்றும் முது நிலை ஆய்வாளர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் சிகிச்சைக்காக வருபவர்களை உடனுக்குடன் சிகிச்சை அளித்து அனுப்ப முடியாத நிலை உள்ளது. மாவட்ட தலைநகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நாள்தோறும் 70 முதல் 80 கால்நடைகளை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 40 முதல் 50 கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.
 
தினக்கூலி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க முடியாததால் அன்றைய தினம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.  அதே போல் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் மற்ற வேலைகள் பாதிக்கப்படுவதால், பின்னர் அழைத்துச் செல்லலாம் என காத்திருக்கும் வேலையில் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதில் மாவட்டத் தலைநகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் ஒருவரும் முது நிலை ஆய்வாளர் மற்றும் கால் நடை பராமரிப்பு உதவியாளர்கள் 3 பேர் என 5 பேர் சிகிச்சை அளிக்க தேவைப்படுகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்தும் வரும் விவசாயிகள் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் நேரமும் வீணாகிறது.

தமிழக்ததில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் இள நிலை உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் ஒரு முறை நேர்காணல் நடைபெற்று அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் நேர்காணலுக்கான அழைப்பு அட்டை அனுப்பி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 34 பதவியிடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர். இனிவரும் காலங்களில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tiruvallur , People's demand to fill the vacancies of animal husbandry assistants in Tiruvallur district immediately
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...