திருப்பதியில் அக்டோபர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் அக்டோபர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதில், நேரடியாக கோயிலில் பக்தர்கள் பங்கேற்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமலை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் குலுக்கல் முன்பதிவு அன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. மேலும்,  அக்டோபர் மாதத்திற்கான (மெய்நிகர்) ஆப்லைனில் நடைபெறும் சேவைகளான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் மற்றும் சுவாமி தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு  மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே, பக்தர்கள் இத்தகவலை கவனித்து  ஆர்ஜித சேவை டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: