மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் உடற்கூறு ஆய்வு அறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்: 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஜிப்மர் குழுவினர் விழுப்புரம் கோர்ட்டில் சீலிடப்பட்ட கவரில் நேற்று இரவு தாக்கல் செய்தனர்.ஸ்ரீமதியுடன் பள்ளியில் ஒன்றாக படித்த 2 மாணவிகள் நேற்று கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.  

இந்த இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகிய 3 பேர் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. அதன்படி 2 உடற்கூறு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் நேற்று சீலிடப்பட்ட கவரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீதும் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜிப்மர் குழு மருத்துவ ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் மாணவி ஸ்ரீமதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த நெருங்கிய தோழிகளான 2 மாணவிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போது, இறப்பதற்கு முன்பு ஸ்ரீமதி என்ன மனநிலையில் இருந்தார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்ததா?. யாராவது டார்ச்சர் செய்தார்களா?, விடுதியில் நடந்த சம்பவம் ஆகியவை குறித்து மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: