இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை, யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கினர். இவர்களிடம் ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை யாழ்பாணம் சாவடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), ரத்தினம் ரஞ்சித் (59), இதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதாகுமாரி (27), இவரது குழந்தைகள் துவாரகன் (6), நிரஞ்சன் (2), திரிகோணமலையை சேர்ந்த ராமன தபிலேந்தகுமாரி (32), இவரது மகள் மித்ரா (2) மற்றும் தலைமன்னார் துறைமுகம் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது (56) ஆகியோர் நேற்றிரவு தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் தனுஷ்கோடி புறப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடி துறைமுகம் பகுதியில் இவர்களை இறக்கிவிட்ட இலங்கை படகோட்டிகள் படகுடன் இலங்கை திரும்பிவிட்டனர். விடியும் வரை கடற்கரையில் காத்திருந்த இலங்கை தமிழர்கள் குறித்து இப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமேஸ்வரம் மரைன் போலீசார் 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்களையும் விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், இலங்கை தலைமன்னார் துறைமுகம் பகுதியில் இருந்து படகில் வந்திறங்கிய சாகுல்ஹமீது என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கடந்த 2015ம் ஆண்டில் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று தலைமன்னாரில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து புலனாய்வு துறை அதிகாரிகள் சாகுல்ஹமீதிடம் தனியாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் படகில் வந்திறங்கிய மற்ற இலங்கை தமிழர்களிடம் மரைன் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப்பின் இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இரண்டு மாத கைக்குழந்தையுடன் நேற்றும் 8 பேர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: