×

சேரன்மகாதேவி அருகே கூனியூரில் ஆபத்தான நிலையில் கன்னடியன் கால்வாய் பாலம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி ஒன்றியத்துக்குட்பட்ட கூனியூர் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலை நம்பி பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கூனியூர் கீழ வடக்குத்தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடியன் கால்வாய் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், தற்போது பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக, 80 சதவீதம் பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்து இருப்பதால் பாலத்தில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், பாலம் கட்டுமானம் மிகவும் பலவீனமாக உள்ளதால் எப்போது பாலம் இடிந்து விழும் என்கிற நிலையில் தான் உள்ளது. தற்போது பாலத்தில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் பாலம் பலவீனமடைந்து வருகிறது.

 இந்நிலையில் கன்னடியன்கால்வாயின் மறுகரையில் தான் இப்பகுதி விவசாயிகளின் விளைநிலங்கள் அனைத்தும் உள்ளது. இந்த பாலத்தை கடந்து தினமும் விவசாயிகள் பலர் தங்களது விளை நிலங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே இப்பாலமானது இப்பகுதி விவசாயிகளின் அன்றாட வழித்தடமாக உள்ளது.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று கடந்த ஆட்சியில்  நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கூனியூர் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பல முறை மனு அளித்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் கன்னடியன் கால்வாய் பாலத்தில் அமலை செடி படர்ந்துள்ளதால் தண்ணீர் தடைபட்டு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்து காணப்படும் கன்னடியன் கால்வாய் பாலத்தை சீரமைத்து தருவதோடு, அமலைசெடிகளை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து கிடக்கும் இப்பாலத்தால் நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து கடந்த ஆட்சியாளர்களிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் போனது. எனவே தற்போது பொறுப்பேற்றிருக்கும் அரசு எங்களின் தேவையை விரைந்து பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்’ என்றார்.

Tags : Kannadian Canal Bridge ,Cooneyur ,Cheranmahadevi , Veeravanallur: More than 8 thousand people are living in Kooniyur panchayat under Cheranmagadevi union.
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு