×

எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு அதிமுக மாஜி அமைச்சர் இல்ல விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் படம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா பேனரில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படம் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எழுந்த பிரச்னையையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இரு தரப்பினர் சார்பிலும் ஒருவரை ஒருவர் நீக்குவதாக அறிவித்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் படங்களை சேர்த்து பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ, இபிஎஸ் தரப்பை சேர்ந்தவர் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓபிஎஸ் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. மேலும் கட்சி அலுவலகங்களிலும் அவரது புகைப்படம் அகற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் புகைப்படம் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் அமைச்சர் காமராஜர் அக்கா வழி பேத்திக்கு நேற்று மன்னார்குடி நடேசன் பிள்ளை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இபி.எஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் காமராஜின் நெருங்கிய உறவினர் திருமண விழா விளம்பர பேனரில் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் பரவி, எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்
கொங்கு மண்டலத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதன்படி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம், வடக்குப்பேட்டை, கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : edapadi , Edappadi Supporters, AIADMK Former Minister, OPS, EPS Pic
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு