அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி மேல்முறையீடு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயசந்திரன், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைந்து கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். இது மனுவில் கேட்கப்படாத கோரிக்கை. இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுகொள்ளதக்கதல்ல. இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படுகிறது. இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: